மரிக்காத கனவுகள்
தேநீரின் ஆவி நாசிகளைத் தழுவுகிறது
இருவரும் எதிரெதிரில்
அசையாமல்
முகம் இறுக
மனம் அவிழ்ந்து சிதறுகிறது
உருண்டோடிய பல ஆண்டுகளை
சேகரித்து வந்த ஆயாசம் அவள் முகத்தில்
மௌனித்துக் கிடந்த உணர்ச்சிகளின்
ஊடாக கிளர்ந்து கனிகிறது
முதிர்ந்த யௌவனம்
எங்களைச் சுற்றி
உடைந்து சிதறிக்கிடக்கும்
வாழ்வுத்துண்டுகளில்
தேடித் தேடிக் களைக்கிறோம்
பெருக்கெடுக்கும் இறந்த காலத்தின்
நதியின் அடியில் இப்போது
நீந்தித் திளைக்கிறோம்
மரிக்காத கனவுகளை
மீன்களைப் போல் தின்று சுகிக்கிறோம்
Comments
Post a Comment