பாழ்



தலைகோதப் பயிர்களின்றித் தவிக்கும் காற்று
மேய நிலமும் புல்லுமின்றி
அங்கும் இங்குமாய்ச் சில மாடுகள்


மனிதர்களின் அரவம் தேடி
வெயிலின் மூர்க்கத்துடன்
இறுக்க முயங்கிக் கிடக்கும்
வெறிச்சோடிய தெருக்களின் மௌனம்


தெருமுனை வீட்டுத் திண்ணையில்
யாருக்காகவோ எப்போதும் காத்திருந்து தேயும்
மூதாட்டியின் காலத்தைச் சுற்றி
அடர்ந்து படரும் தனிமை

பாரதிராஜாக்களின் பரிவாரங்களை
வரவேற்க பசுமையான கதைகளும்
காட்சிகளுமின்றி
பாழ்வெளியாய் உறைந்து கிடக்கும்
எமது மண்

நவீனத்தின் நிராகரிப்பில்
நசிந்து துடிப்படங்கி
மரணப் படுக்கையில் கிடக்கும்
அதனை
நினைவுகள் என்ற பெயரில்
கீறும் எழுத்துகளில்
பிணவாடை அடிக்கிறது

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை