Skip to main content

மக்காத ஓலைகள்



இன்று

விசுக்கென்று

வந்துவிட்டது

அந்த இடம்

 

நீண்ட தூர

சைக்கிள் பயணத்தின்

பிறகு

அதைக் கண்டடையும் போது

உள்ளத்தின்

சிறகுகள்

வானளாவ

விரிந்து படபடக்கும்

 

வியர்வையில்

நனையும் புன்னகை

மின்னி மிளிரும்

 

 

காராஞ் செடியும்

சூராம் பழமும்

கொண்டையும்

குஞ்சமுமாய்

குலுங்கும்

பஞ்சவர்ணப் பூக்களும்

மஞ்சள் வண்ணத்தில்

ஆங்காங்கே பூத்து

கூடி நின்று குதூகலித்து

பேசிச் சிரிக்கும்

ஆவாரம் செடிகளும்

இன்னும்

பெயர் அறியா

தாவரங்களும்

 

தங்கள்

மூச்சணுக்களைக்

கலந்து பிசைந்து

காற்றுக்குள்

பொதிந்தனுப்பும்

அந்த வாசனைக்கு

என்ன பெயர்?

 

வெயிலின் மீதேறி

வந்தெமைத் தழுவிய

அந்தச் சுகந்தத்தை

இன்றுவரை

வேறெங்கும்

என்னால்

நுகர்ந்துணர

முடியவில்லை

 

அதோ வந்தாச்சு

ஒற்றைப் பனை

 

பள்ளிக்குச் செல்லும்

தூரத்தின் சரிபாதியை

கடந்த நிம்மதி

 

இனி உற்சாகம்

கரைபுரளும்

 

கால்கள் வேகமெடுக்கும்

சைக்கிள் சக்கரங்கள்

காற்றில் மிதக்கும்

 

பள்ளி செல்லும் வரை

பற்கள் மூடாது

 

முதல் நாள்

வீட்டுக் கணக்கு

முடிக்காமல்

போனதற்காக

நாகலிங்கம் சார்

கிள்ளி

அடிக்கும் போது

தானாகவே மூடிக்கொள்ளும்

என்பது வேறு சங்கதி

 

வீடு திரும்பும் போது

ஒற்றைப் பனை

நர்த்தனமாடும்

 

ஓலைகள் காற்றில்

படபடத்து இரைச்சலிட

ஆனந்தக் கூத்தாடும்

குதிபோடும்

 

கூட ஒரு பனை

இருந்து ஆடினால்

இன்னும் நன்றாக

இருந்திருக்கும்

 

அந்தப் பனையை

ஒற்றையாக நட்டவர் யார்?

 

இன்று

நான் சைக்கிளில்

செல்லவில்லை

 

காலம் விழுங்கியது

போக மீந்த

எச்சமாக

திரும்பிய போது

 

அந்த இடம்

வெறுமையாக இருந்தது

 

ஒற்றைப் பனை

நின்றதற்கான

சுவடு கூட

இல்லை

 

வெட்டப்பட்டதா?

வீழ்ந்ததா?

ஓலைகள் என்னவாகி இருக்கும்?

 

நினைவுகளின்

ஈரம் சுமந்து

காற்றில்

பறந்திருக்க

முடியாது

 

மக்கிப் போகாத

வரலாறுகள் அனைத்தும்

ஒற்றைப் பனையின்

உதிர்ந்து புதைந்த

ஓலைகளை

தோண்டி எடுத்து

எழுதிக் கொண்டிருந்தன

 

அவற்றின்

ரகசிய

நடவடிக்கைகளை

அறிந்து கொண்ட

அதிர்ச்சியோ

என்னவோ

 

வெட்டவெளியில்

பெருங்காற்றாய்

ஊளையிட்டு

புழுதி கிளப்பி

சருகுகளை

வாரி இறைத்தபடி

மூர்க்கத்துடன்

காளியாட்டம் போட்டன

 

மயிர்க்கூச்செரிந்த படி

வீடு சென்ற போது

“இப்பிடியா

புள்ள மழையில

நனைஞ்சுக்கிட்டே வருவ…?”

என்று

செல்லக் கோபத்துடன்

கேட்கவும்

தலைதுவட்டி விடவும்

யாருமில்லா

அமைதி யின் ஓலம்

அச்சுறுத்தியது

 

வெற்றிலையை

உதக்கிய படி

விரிந்து

படர்ந்தது

ஆத்தாளின்

புன்னகை.

Comments

Popular posts from this blog

கொலைகாரன்

    செல்பேசி இணைப்பை அவன் துண்டித்த வேகம் என்னைப் படபடக்க வைத்தது   அவனுக்கும் எனக்கும் இடையே கோபப்பட காரண காரியங்கள் ஏதுமில்லை   மனம் வெறுமையாகும் போது காரணமின்றி அவனை அழைப்பேன்   நான் எதிர்பாராத விளக்கம் ஒன்றைக் கூறி திடுக்கிட வைப்பான்   அதுவே அப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருக்கும்.   புரை ஏறுதலை நிறுத்தும் பொய்யதிர்வைப் போன்ற விசித்திரமான சிகிச்சை அது   சொல்லப் போனால் அன்று அவனை அழைக்க ஒரு காரணம் இருந்தது   விடாத பின் கழுத்து வலி குறித்து அவனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆயாசத்துடன்தான் அழைத்தேன்   வலி பற்றி விவரித்தேன் வலியின் அனுபவங்கள் அவனுக்கும் இருந்தது   மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்தான்   அழைத்த போது அவர் வேலையாக இருந்தார்   பின்னர் மருத்துவரும் அழைக்கவில்லை நானும் அழைக்கவில்லை வலி தொடர்ந்தது   ஆனால் அவனை நான் மீண்டும் அழைத்தேன்   மருத்துவரிடம் பேசினாயா? ...

எங்கே அந்தச் சூரியன்?

  (தாகம் இதழுக்காக 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக அமைந்தது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே? இப்போது ...