Skip to main content

கொலைகாரன்

 


 


செல்பேசி

இணைப்பை

அவன் துண்டித்த

வேகம்

என்னைப் படபடக்க

வைத்தது

 

அவனுக்கும் எனக்கும்

இடையே

கோபப்பட

காரண காரியங்கள்

ஏதுமில்லை

 

மனம்

வெறுமையாகும் போது

காரணமின்றி

அவனை

அழைப்பேன்

 

நான் எதிர்பாராத

விளக்கம் ஒன்றைக் கூறி

திடுக்கிட வைப்பான்

 

அதுவே

அப்போதைக்கு

எனக்கு

போதுமானதாக

இருக்கும்.

 

புரை ஏறுதலை

நிறுத்தும்

பொய்யதிர்வைப்

போன்ற

விசித்திரமான

சிகிச்சை அது

 

சொல்லப் போனால்

அன்று அவனை

அழைக்க

ஒரு காரணம்

இருந்தது

 

விடாத

பின் கழுத்து வலி

குறித்து

அவனுடன்

பகிர்ந்து கொள்ளும்

ஆயாசத்துடன்தான்

அழைத்தேன்

 

வலி பற்றி விவரித்தேன்

வலியின் அனுபவங்கள்

அவனுக்கும் இருந்தது

 

மருத்துவர்

ஒருவரைப்

பரிந்துரைத்தான்

 

அழைத்த போது

அவர் வேலையாக

இருந்தார்

 

பின்னர்

மருத்துவரும் அழைக்கவில்லை

நானும் அழைக்கவில்லை

வலி தொடர்ந்தது

 

ஆனால்

அவனை நான்

மீண்டும் அழைத்தேன்

 

மருத்துவரிடம்

பேசினாயா?

 

அழைத்தேன்

வேலையாக

இருந்தார்.

 

வலி உனக்கா

அவருக்கா?

 

பேச்சின்

இடைவெளியில்

கழுத்தின் வலி

அதிகரித்தது

விண்விண் என்றது

 

கனல் தகிக்கும்

சொற்களுடன்

அவன் தொடர்ந்தான்

 

அறுபதாண்டு காலத்தை

கடந்து விட்டாய்

 

நீ யார் என்பதை

அறிய நினைத்ததுண்டா?

 

உனக்கு என்ன

வேண்டும் என்பதை

உணரச் சற்றேனும்

முயன்றதுண்டா?

 

உடல்வலிதான்

உன்னை

உனக்கு நினைவு

படுத்துகிறது

 

வலிக்கேனும்

நன்றி சொல்லு

நாலும் கெட்ட

மூடனே

 

எஜமான் உத்தரவுப்படி

பாய்ந்தோடும்

நாய் கூட

தன் இலக்கறியும்

 

நீ இலக்கை

மட்டுமா இழந்தாய்

 

உன் சிறகுகள்

ஒவ்வொன்றையும்

உருப்படியற்ற

ஓட்டத்தின்

உராய்வுகளில்

இழந்தாய்

இழந்து

கொண்டே

இருக்கிறாய்

 

உனக்கான

வெளி அனைத்தையும்

உதாசீனப் படுத்தி

வெளியேறினாய்

 

உன் தனித்துவத்தை

அன்றாடம் எனும்

அமிலத்தில்

முக்கிக் கரைத்தெறித்து

புன்னகைத்தாய்

 

யாருக்காகவோ

ஓடிக் கொண்டிருக்கிறாய்

 

நினைவாகக் கூட

உன் சுவடுகளை

அவர்கள்

சுமக்கப் போவதில்லை

 

இப்போது

குற்றுயிரும்

குலை உயிருமாக

திரும்பிப் பார்க்கவும்

திராணியற்று

திகைத்து நிற்கிறாய்

 

உன் பிறப்பருமை

உணராமலேயே

உன்னை

மெல்ல மெல்லக்

கொன்றுவிட்டாய்

 

கொல்லாமை

பிற உயிர்களை

கொல்லாமல்

இருப்பதற்கு

மட்டுமல்லடா

மடையனே

 

சுயமெனும்

உயிர்ப்பையும்

கொன்றுவிடக்

கூடாதென எச்சரிக்கும்

அறக்கூற்றும்

அதுதானடா…

 

கொன்று விட்டாய்

உன்னில்

உனக்கான

உயிர்ப்பாக

உயிர்த்திருந்த

அனைத்தையும்

ஈவிரக்கமே இல்லாமல்

கொன்றுவிட்டாய்

 

அவன்

உரையாடல்

துண்டிக்கப்பட்டதன்

அதிர்வால்

பின் கழுத்தில்

இருந்த வலி

உச்சந்தலை வரை

பரவியது

 

ஜன்னலோரம்

பின்னிய

வலை இழைகள்

அனைத்தும்

அறுந்து

கடைசியாகத்

தொடுக்கிக் கொண்டிருந்த

ஒற்றை இழையில்

தொங்கியபடி

துடித்த சிலந்தி

எனைக் கண்டதும்

அமைதியானது.

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

இன்று விசுக்கென்று வந்துவிட்டது அந்த இடம்   நீண்ட தூர சைக்கிள் பயணத்தின் பிறகு அதைக் கண்டடையும் போது உள்ளத்தின் சிறகுகள் வானளாவ விரிந்து படபடக்கும்   வியர்வையில் நனையும் புன்னகை மின்னி மிளிரும்     காராஞ் செடியும் சூராம் பழமும் கொண்டையும் குஞ்சமுமாய் குலுங்கும் பஞ்சவர்ணப் பூக்களும் மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே பூத்து கூடி நின்று குதூகலித்து பேசிச் சிரிக்கும் ஆவாரம் செடிகளும் இன்னும் பெயர் அறியா தாவரங்களும்   தங்கள் மூச்சணுக்களைக் கலந்து பிசைந்து காற்றுக்குள் பொதிந்தனுப்பும் அந்த வாசனைக்கு என்ன பெயர்?   வெயிலின் மீதேறி வந்தெமைத் தழுவிய அந்தச் சுகந்தத்தை இன்றுவரை வேறெங்கும் என்னால் நுகர்ந்துணர முடியவில்லை   அதோ வந்தாச்சு ஒற்றைப் பனை   பள்ளிக்குச் செல்லும் தூரத்தின் சரிபாதியை கடந்த நிம்மதி   இனி உற்சாகம் கரைபுரளும்   கால்கள் வேகமெடுக்கும் சைக்கிள் சக்கரங்கள் காற்றில் மிதக்கும்   பள்ளி செல்லும் வரை பற்கள் மூ...

எங்கே அந்தச் சூரியன்?

  (தாகம் இதழுக்காக 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக அமைந்தது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே? இப்போது ...