பால்கனி
கிராதிக் கம்பிகளின் மீது
தத்தியும் தாவிக் குதித்தும்
முகம் காட்டி
விளையாடிய போது
இனம்புரியா
கொண்டாட்டம்
என்
மனதிற்குள்
விகசிக்கும்
நேரம்
போவதறியாமல்
அவற்றின்
கோமாளி
கூத்தழகை
ரசித்தபடி
எனை மறந்து
கிரங்கிக்
கிடந்திருக்கிறேன்
பொசு பொசு
உடலும்
முக்கோண
வடிவில்
அம்புக் குறி போல்
தோன்றும் முகத்துடன்
மின்னல் வேகத்தில்
முன்னோக்கி
நகர்ந்தோடும்
அவற்றின்
உடல்மொழியும்
குழந்தைகளின்
செல்லச் சிணுங்கலை
சீண்டல் குறும்பை
நினைவு படுத்தும்
வெறுக்கவே
முடியாத
அவற்றின்
வினோதம்
நனவிலி
மனதின்
இடுக்குகளுக்குள்
ஊடுருவி
கிச்சு கிச்சு
மூட்டும்
உணர்வின்
சிலிர்ப்பில்
அறிவு கூசும்
சிரிப்பு முட்டும்
ஒரு காலை நேரத்தில்
அது நடந்தது
பால்கனி வெளியில்
மறந்து வைத்துவிட்ட
பழம் புத்தகம்
நீண்ட நெடிய
வாழ்வின் வாசனை
பொதிந்து
பழுப்பேறிய
பக்கங்கள்
கீறிக் கிழித்து
சிதைக்கப்பட்ட
துண்டுகளாக
சிதறிக் கிடந்தன
காலத்தின் சுவடுகள்
விழுமியங்கள்
அனைத்தும்
பொருளற்ற
துகள்களாகி
காற்றில்
பறந்தன
பால்கனி
கிராதிக் கம்பிகளில்
குதியாட்டம்
போட்டுக் கொண்டிருந்த
அணில்களின்
எக்காளத்தை
இப்போதெல்லாம்
என்னால்
ரசிக்க முடியவில்லை.

Comments
Post a Comment