Skip to main content

இது நியாயமா ‘அன்பு’?



அது எண்பதுகளின் தொடக்கம். பதின் பருவத்திலேயே உனைச் சந்தித்து விட்டேன். நர்சம்மா மகன் என்ற அறிமுகத்துடன் தமயந்தி அக்காள் அறிமுகப்படுத்தி வைத்தது. பின்னர்தான் தெரிந்தது நர்சம்மா என்றும், பார்வதி அம்மா என்றும் அழைக்கப்பட்ட அந்தத் தாய், என் தாயாருக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியில் பலருக்கும் அறிமுகமான, ஆசுவாசமான நட்பாகவும், உறவாகவும் இருந்துள்ளார் என்பது. அவரது அன்புச் செல்வனான - அன்புக்கரசனாகிய நீ, ‘அன்பு’ என்ற அடையாளத்துடன் எனைச் சார்ந்த எல்லோர் நெஞ்சிலும் குறுகிய காலத்திற்குள்ளேயே நிறைந்து விட்டாய்.

ஆனால், உனக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமானதற்கு அது மட்டுமே காரணம் அன்று. இளம் வயதிலேயே உன் நிதானமும், தீர்க்கமும், ஆழமான வாசிப்பும்தான் நான் அதுவரை பார்த்த நண்பர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்திக் காட்டின. அந்த நட்பை மேலும் ஆழமாக்கி அழகாக்கியவர் நம் இருவருக்கும் மூத்த தோழமையாய் இன்றுவரை திகழும் அன்பு அண்ணன் அயூப்கான். என் பெற்றோருக்கு எனைவிடப் பிரியத்திற்குரிய பிள்ளையானாய். என் சகோதர, சகோதரிகள், அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் அண்ணனாக, தம்பியாக, சித்தப்பாவாக, மாமாவாக, அண்ணனாக, தம்பியாக … எல்லா உறவுகளாகவும் நீ ஊடுருவி நின்றாய்!
ரஃபீக், மதிவாணன், காதர், ஷாஜஹான் என ஒரு பெரிய நட்புத் தோப்பு முழுவதும் ‘அன்பு’க் கொடியாய் நீ அடர்ந்து படர்ந்து பசுமையாய்த் துளிர்த்துக் குலுங்கிய காலமது!
உன்னுடனான நாற்பதாண்டுகால உரையாடல்களில், நட்பின் ஈரம் படிந்த நினைவுகளில் எதைச் சுமப்பது? எதை மறப்பது?
வெற்றியூரில் இருந்து நால்ரோடு வரை நடந்து கொண்டே நாம் பேசிய கதைகளை எப்படி மறந்தாய் நண்பா? எனக்கு இன்லாண்ட் லெட்டரில் நீ அப்போது எழுதிய கடிதங்களை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். மனிதர்களில் நீ மகத்தானவன். சிற்றிதழ்கள், கவிதைகள், இலக்கியங்கள், திரைப்படங்கள் என நீ என்னுள் திறந்து வைத்த சாளரங்கள்தான் எத்தனை… எத்தனை? பாரதி, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, ல.ச.ரா, பிரமிள், கு.ப.ரா, எம்.வி. வெங்கட்ராம் தொடங்கி, பாரதிதாசன், வாணிதாசன், மு.மேத்தா, வைரமுத்து என அத்தனை பேரையும் அவர்களது படைப்புகள் குறித்துச் சொல்லி எனை வியக்க வைத்தவன் அல்லவா நீ! அதன் தொடர்ச்சியாக நண்பர்களுடன் சேர்ந்து ‘அகவல்’ என்ற சிற்றிதழை நடத்தி ஒரு இதழாசிரியனாக என்னை உயர்த்தி அழகு பார்த்தவன் அல்லவா நீ?
என் திருமணத்தில் மஞ்சள் பையுடன் நீ திரிந்த காட்சி இன்றும் என் மனக் கண்ணில் நிழலாடுகிறதே…
அப்போதெல்லாம் சத்தியராஜ் உனக்குப் பிடித்த நடிகர். அவர் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தை, காரைக்குடி பாண்டியன் திரையரங்கில் பார்ப்பதற்காக நீயும், நானும் அடித்துப் பிடித்து கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்தில் சென்றது நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.
எத்தனை எத்தனை மேடு பள்ளங்கள். எந்தத் தருணத்திலும் நீ என் மீது காட்டிய பரிவும், பாசமும் மட்டும் வற்றாத பெருங்கருணைப் பேராறாகப் பெருக்கெடுத்ததே தவிர, ஒரு போதும் சிறுத்துக் குறுகியதில்லையே!
‘அன்பு’க்கு அன்பு சேர்த்த அன்புத் துணை பத்மஜா. உனைப் பிரிந்த அவரது நிலை என் நெஞ்சை உலுக்குகிறது. எப்படி அவர் தாங்கிக் கொள்ளப் போகிறார்?
தொண்ணூறுகளின் இறுதிவரை என் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் அறிந்தவன் நீ. நீ அறியாத மூலை முடுக்கென்று என் வாழ்வில் எதுவுமில்லை. பின்னாளில் காலத்தின் சூழலால் நமக்கிடையேயான உரையாடலும், சந்திப்புகளும் குறைந்தாலும் அன்பின் நதிப்பெருக்கு மட்டும் உன்னிடம் ஒரு போதும் வற்றவில்லை. “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற வரியை, உனைப்போல ஒருவனை அவன் காலத்தில் சந்தித்த அனுபவத்தில்தான் அந்த வள்ளுவன் வரைந்தானோ என்னவோ தெரியவில்லை.
உன் அடிமனதில் விவசாயியாக வாழ வேண்டும் என்றொரு கனவு கருக்கொண்டிருந்ததை எப்படி நான் அறியாமல் போனேன்? நான்கு ஆண்டுகளில் ஒரு நிலத்தை வாங்கி தோப்பாக மாற்றி, பெரும் மாயத்தையே நிகழ்த்தி இருக்கிறாய். தோப்பை உருவாக்கிய உனக்கு அதில் இளைப்பாறத் தெரியாமல் போனது ஏன் நண்பா?
ஏன் இப்படிச் செய்தாய்? என்ன அவசரம் உனக்கு? எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கும் நீ இதில் மட்டும் ஏன் பதற்றம் காட்டினாய்? உன்னைப் போல் ஒரு நண்பனை இனி நான் எங்கே தேடுவேன்? எப்படித் தாங்குவேன். எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் வாட்டும் இத்துயரை எப்படித் தாங்குவேன்? இது நியாயமா அன்பு?

Comments

Popular posts from this blog

கொலைகாரன்

    செல்பேசி இணைப்பை அவன் துண்டித்த வேகம் என்னைப் படபடக்க வைத்தது   அவனுக்கும் எனக்கும் இடையே கோபப்பட காரண காரியங்கள் ஏதுமில்லை   மனம் வெறுமையாகும் போது காரணமின்றி அவனை அழைப்பேன்   நான் எதிர்பாராத விளக்கம் ஒன்றைக் கூறி திடுக்கிட வைப்பான்   அதுவே அப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருக்கும்.   புரை ஏறுதலை நிறுத்தும் பொய்யதிர்வைப் போன்ற விசித்திரமான சிகிச்சை அது   சொல்லப் போனால் அன்று அவனை அழைக்க ஒரு காரணம் இருந்தது   விடாத பின் கழுத்து வலி குறித்து அவனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆயாசத்துடன்தான் அழைத்தேன்   வலி பற்றி விவரித்தேன் வலியின் அனுபவங்கள் அவனுக்கும் இருந்தது   மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்தான்   அழைத்த போது அவர் வேலையாக இருந்தார்   பின்னர் மருத்துவரும் அழைக்கவில்லை நானும் அழைக்கவில்லை வலி தொடர்ந்தது   ஆனால் அவனை நான் மீண்டும் அழைத்தேன்   மருத்துவரிடம் பேசினாயா? ...

மக்காத ஓலைகள்

இன்று விசுக்கென்று வந்துவிட்டது அந்த இடம்   நீண்ட தூர சைக்கிள் பயணத்தின் பிறகு அதைக் கண்டடையும் போது உள்ளத்தின் சிறகுகள் வானளாவ விரிந்து படபடக்கும்   வியர்வையில் நனையும் புன்னகை மின்னி மிளிரும்     காராஞ் செடியும் சூராம் பழமும் கொண்டையும் குஞ்சமுமாய் குலுங்கும் பஞ்சவர்ணப் பூக்களும் மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே பூத்து கூடி நின்று குதூகலித்து பேசிச் சிரிக்கும் ஆவாரம் செடிகளும் இன்னும் பெயர் அறியா தாவரங்களும்   தங்கள் மூச்சணுக்களைக் கலந்து பிசைந்து காற்றுக்குள் பொதிந்தனுப்பும் அந்த வாசனைக்கு என்ன பெயர்?   வெயிலின் மீதேறி வந்தெமைத் தழுவிய அந்தச் சுகந்தத்தை இன்றுவரை வேறெங்கும் என்னால் நுகர்ந்துணர முடியவில்லை   அதோ வந்தாச்சு ஒற்றைப் பனை   பள்ளிக்குச் செல்லும் தூரத்தின் சரிபாதியை கடந்த நிம்மதி   இனி உற்சாகம் கரைபுரளும்   கால்கள் வேகமெடுக்கும் சைக்கிள் சக்கரங்கள் காற்றில் மிதக்கும்   பள்ளி செல்லும் வரை பற்கள் மூ...

எங்கே அந்தச் சூரியன்?

  (தாகம் இதழுக்காக 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக அமைந்தது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே? இப்போது ...