கனவின் குழந்தைகள்
நனவிலி பொம்மைகளின் நர்த்தனத்தில் மெய்மறந்து குதூகலித்தன கனவின் குழந்தைகள் மெய் எது மெய்நிகர் எது வண்ணங்கள் பீறிடும் கணினி மென்திரைக்குள் இருந்து சீறி வந்தன வெண்ணிறக் குதிரைகள் ராஜனாக குதிரை மீதேறி என் ஊர்வலம் தொடங்க எத்தனித்த போது உரைத்தது என் கால்களை துண்டாக்கி திசைக் கொன்றாய் வீசியவர் யார் பெருக்கெடுக்கும் குருதி மண்டலம் எங்கும் மிதந்த நனவிலி் பொம்மைகள் கெக்கலித்தன பின் நான் மட்டும் ஏன் அழ வேண்டும் பீறிட்டு பெருக்கெடுத்த வண்ணங்களுக்குள் மூழ்கித் திளைத்தோம் குருதிப் பெருக்கின் நிறம் இப்போது வேறாக குழம்பி தெரிந்தது நிறங்களை ருசிக்கத் தொடங்கிய போது எனக்கும் சிரிப்பு வந்தது இப்போது நனவிலி பொம்மைகள் மூர்ச்சையாகி வண்ணப் பரப்பெங்கும் மிதந்து கொண்டிருந்தன கனவின் குழந்தைகள் கைகொட்டிச் சிரித்தன கண்ணீர் கசிய.