Posts

Showing posts from 2020

நீலமும் இருட்டும்

சொற்களின் வழி சுவாசிக்கத் தெரிந்த மீனுக்கு ஆழம் பொருட்டல்ல கடக்க முடியாத தொலைவுகளை இரையாக உண்டு செரிக்கும் பழக்கம் எப்படியோ வாய்த்து விட்டது அழுக்குதானே தொலைவு தொலைவுதானே துயரம் துயரம்தானே கொண்டாட்டமும் வாய்களும், வாலும் அசைவதெப்படி பிறழ்வாகும் பயணத்திற்கான விசையை வேறெப்படி பெறுவதாம் வலைக்கும் உலைக்கும் தப்புவதற்கான சாகசங்களை கற்றுக் கொடுத்த கடலின் ஆழத்தில் நீந்த நீந்த நீண்டன முடிவற்ற புதிர்கள் நீருக்குள் இசைத்த கானங்களில் இருந்து முளைத்த செதில்கள் உடலெங்கும் பரவசம் கொண்டு போர்த்தின நீலமும் இருட்டும் கண்கள் வழியே கசிந்த வாழ்வின் நிறமா நீந்துதல் நிர்ப்பந்தம் உயிர்த்தல் வாய்ப்பு மரணம் நிச்சயம் மீனின் கதை எனினும் நீரும் போர்க் களமே

கனவின் குழந்தைகள்

நனவிலி பொம்மைகளின் நர்த்தனத்தில் மெய்மறந்து குதூகலித்தன கனவின் குழந்தைகள் மெய் எது மெய்நிகர் எது வண்ணங்கள் பீறிடும் கணினி மென்திரைக்குள் இருந்து சீறி வந்தன வெண்ணிறக் குதிரைகள் ராஜனாக குதிரை மீதேறி என் ஊர்வலம் தொடங்க எத்தனித்த போது உரைத்தது என் கால்களை துண்டாக்கி திசைக் கொன்றாய் வீசியவர் யார் பெருக்கெடுக்கும் குருதி மண்டலம் எங்கும் மிதந்த நனவிலி் பொம்மைகள் கெக்கலித்தன பின் நான் மட்டும் ஏன் அழ வேண்டும் பீறிட்டு பெருக்கெடுத்த வண்ணங்களுக்குள் மூழ்கித் திளைத்தோம் குருதிப் பெருக்கின் நிறம் இப்போது வேறாக குழம்பி தெரிந்தது நிறங்களை ருசிக்கத் தொடங்கிய போது எனக்கும் சிரிப்பு வந்தது இப்போது நனவிலி பொம்மைகள் மூர்ச்சையாகி வண்ணப் பரப்பெங்கும் மிதந்து கொண்டிருந்தன கனவின் குழந்தைகள் கைகொட்டிச் சிரித்தன கண்ணீர் கசிய.

நிற்றல் - மேனா.உலகநாதன்

Image
இத்தனை அழகிய தீவு எனக்குள் உருவானதெப்படி கொந்தளிக்கும் மனக்கடலின் ஆர்ப்பரிப்புக்குப் பணியாத பேரமைதி பேரழகு பெரும் பசுமை ஆழி சினந்து அலைகள் எப்போதும் கரை தாண்டலாம் தீவு திட்டாகலாம் பறவைகள், மரங்கள், பூக்கள், காய்கள், கனிகள் அனைத்தும் ஒரு நொடியில் புதையுண்டு போகலாம் ஆனாலும் அந்த ஒற்றைப் பசும்புல்லுக்கு அச்சமில்லை நுனியில் துளித் திவலையுடன் நிமிர்ந்து நிற்கிறது கடலைப் பிரதிபலித்தபடி

துயில்

துயில் .... புழுக்களே நீங்கள் நிம்மதியாக  துயில் கொள்ளுங்கள் என்ன  நடந்துவிடப் போகிறது மிருகங்களின்  காலடிகளில்  மிதிபட்டு  உயிர் போகும்  தருணத்தில்  சிறிது வலிக்கும் வேறு என்ன  நடந்துவிடப் போகிறது புழுக்களே  நீங்கள் நிம்மதியாக  துயில் கொள்ளுங்கள்