Posts

Showing posts from December, 2022

நடை

Image
  நடந்தாயிற்று நிறையவே நடக்கக் கூடாது எனினும் அவை அனைத்தும் நிறைய நிறையவே நடந்தாயிற்று தேடல் மட்டுமேனும் எஞ்சுமா எனுமளவிற்கான தேடலும் சலிப்பின்றி தொடர்கிறது புன்னகையைத் தேடி வெகு தொலைவு நடந்தாயிற்று குளமாகும் விழிகளும் நடுங்கியபடி கூப்பும் கரங்களும் சொல்லத் தவறிய செய்திகளின் குவியல்களுக்கு அடியில் தேடி வந்த புன்னகை புதைந்து கிடக்கக் கூடும் தேடலின் தீர்க்கத்தால் வாய்த்த துலக்கத்தின் ஒளி விழிகளில் ததும்பிச் சுடர்ந்து நெடுந் தூரம் பாய்கிறது பரவும் வெளிச்சத்தில் தெரியும் குறுங் குன்றுகள் அனைத்தும் மரணித்த புன்னகைப் பூக்களின் குவியல்கள் என்பதும் புரிகிறது எனினும் இது வெறும் குப்பைகளைக் கிளறுவதற்கான நடை அன்று - மேனா . உலகநாதன்